38 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபையில் நுழையும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்...!

இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஒரு முறை செயல் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Update: 2023-03-02 10:37 GMT

சென்னை,

ஈரோடு வெங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவன் என்பதன் சுருக்கமே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரனும், திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கும்போது அண்ணாவுக்கு பக்கபலமாக இருந்த சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத்தின் மூத்த மகன் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். சென்னை மாநில கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற இளங்கோவன், இளைஞர் காங்கிரசில் தீவிர செயற்பாட்டளாராக இருந்தார்.

1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஒரு முறை செயல் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

2004-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் மக்களவை தொகுதி எம்.பியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். மன்மோகன்சிங் அமைச்சரவையில், மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது பாஜக அரசு கொண்டு வந்த ஜவுளி தொழில்துறை மீதான சென்வாட் வரியை நீக்கி, ஜவுளி தொழில் திறம்பட செயல்பட வழிவகுத்தார்.

2009 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பிறகு 2021 சட்டப்பேரவை தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜனவரி 4-ம் தேதி திருமகன் ஈவேரா மறைந்ததால், இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி முகத்தில் உள்ளார். இதன்மூலம் 34 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

Tags:    

மேலும் செய்திகள்