காமராஜரின் பிறந்தநாளை கொண்டாட பா.ஜ.க.வினருக்கு அருகதை இல்லை- ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

காமராஜரின் பிறந்தநாளை கொண்டாட பா.ஜ.க.வினருக்கு அருகதை இல்லை என ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Update: 2022-08-13 22:44 GMT

ஈரோடு

காமராஜரின் பிறந்தநாளை கொண்டாட பா.ஜ.க.வினருக்கு அருகதை இல்லை என ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

காமராஜர்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு மரப்பாலம் நால்ரோடு சந்திப்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு சத்தியாகிரக பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் ஜாபர் சாதிக் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் இருந்து நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிற சர்வாதிகாரியாக இருக்கிற மோடி, இன்றைக்கு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும், காமராஜரையும் புகழ்பாட வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தலைவரான காமராஜரையும், அவரது பிறந்தநாளையும், கொண்டாடுவதற்கு பா.ஜ.க.வினருக்கு சிறிது கூட அருகதை, தகுதி இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த்

இதைத்தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே உணவு என பா.ஜ.க. கூறுவது தமிழ்நாட்டின் மீது இந்தியை திணிப்பதற்காக செய்யப்படுவது. அவர்களது எண்ணம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பலிக்காது. நடிகர் ரஜினிகாந்த், தமிழக கவர்னரை சந்தித்து விட்டு, அரசியல் பேசினோம் என கூறி உள்ளார். இதில், இருந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்துக்கான விளம்பரத்திற்கு தயாராகி வருகிறார் என்று தெரிகிறது,' என்றார்.

இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஈ.பி.ரவி, சபுராமா ஜாபர் சாதிக், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் ராஷேஸ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி, மாவட்ட துணைத்தலைவர் பாஷா, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநகர செயலாளர் கே.பி.சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்