ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Update: 2023-02-03 20:59 GMT

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

திருமகன் ஈவெரா திட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனது மகன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, ஈரோடு தொகுதியில் நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை வடிவமைத்து, அமைச்சர் சு.முத்துசாமி உறுதுணையுடன் சில திட்டங்களை நிறைவேற்றினார். இன்னும் ஏராளமான திட்டங்களை அவர் செயல்படுத்த விரும்பினார். அவர் விட்டுச்சென்ற பணிகளை நான் தொடர்வேன்.

குறிப்பாக ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து பல திட்டங்கள் தீட்டி வைத்திருந்தார். அந்த திட்டங்களை நான் அமைச்சருடன் இணைந்து நிறைவேற்றுவேன். இதுபோல் ஜவுளித்தொழிலும் பாதிக்கப்படாமல், விவசாயிகளும் பாதிக்கப்படாமல் அமைச்சர், அதிகாரிகளின் ஆலோசனை பெற்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் திட்டங்கள் நிறைவேற்றுவேன்.

சிறப்பான பணி

எங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க. எங்கள் கூட்டணியில் வேட்பாளர் அறிவிக்கும் முன்பே கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டோம். அமைச்சர் கே.என்.நேருவும், சு.முத்துசாமியும் மற்ற அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மிகவும் சுறு சுறுப்பாக கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். கம்யூனிஸ்டு கட்சியினர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் அமைப்புகள் என்று கூட்டணியின் அனைத்து கட்சியினரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்கிறார். யார் போட்டியிடுகிறார் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. என்னை பொறுத்தவரை எங்கள் வெற்றி என்பது தனி மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி அல்ல. மதச்சார்பற்ற கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றியாகும்.

இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்