எனது தாத்தா, தந்தை, மகன் விட்டுச்சென்ற பணிகளை செய்வதற்காக போட்டியிடுகிறேன்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

எனது தாத்தா, தந்தை, மகன் விட்டுச்சென்ற பணிகளை செய்வதற்காக போட்டியிடுகிறேன் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Update: 2023-01-30 20:50 GMT

எனது தாத்தா, தந்தை, மகன் விட்டுச்சென்ற பணிகளை செய்வதற்காக போட்டியிடுகிறேன் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டியிட போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஈரோடு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் வந்தார். அப்போது அவரை, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து, தங்களுக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டு கொண்டார். இதைஏற்று தாங்கள் போட்டியிடுவதை தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பதிவு குறித்து எனக்கு தெரியாது. அவருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தயாராக இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கட்சி கூட்டணிகளில் பல கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன். அதனை வெட்டியும், ஒட்டியும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர். இதை நான் பொருட்படுத்தவில்லை.

ஆவணப்படம்

முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வின்றி செயல்படுகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுவார். பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவார். குஜராத்தில் சிறுபான்மையினர் படுகொலை தொடர்பான ஆவணப்படம் பி.பி.சி. வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள், 'பிரதமர் மோடிதான் இதற்கு காரணம்' என்று கூறி வருகிறோம். இப்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல், 'அதானி நிறுவனத்தில் ஊழல்கள் நடப்பது' குறித்து ஏற்கனவே பல முறை தெரிவித்துள்ளார். இதைத்தான் தற்போது அமெரிக்கா நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. எனது தாத்தா ஈவெரா, என் தந்தை சம்பத், என் மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் ஈரோட்டின் வளர்ச்சிக்காக பல பணிகள் ஆற்றி உள்ளனர். அவர்கள் விட்டு சென்ற பணிகளை செய்வதற்காகத்தான் நான் போட்டியிட ஒப்புக்கொண்டேன்.

லஞ்சம், ஊழலுக்கு...

எம்.பி.யாக, மத்திய மந்திரியாக இருந்துவிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக போட்டியிடுவதா? என சிலர் கேட்கின்றனர். கலெக்டராக இருந்தவர் துணை தாசில்தாராக பணியாற்றுவது போல இருப்பதாகவும் கருதுகின்றனர். 'கலெக்டரோ, துணை தாசில்தாரோ, உதவியாளரோ, மக்கள் பணியாற்ற வந்துள்ளோம்' என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறும்போது, 'ஈரோடு கிழக்கு தொகுதி முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், இடைத்தேர்தலில் நல்ல வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். மதச்சார்பற்ற சூழலை உருவாக்கும் புள்ளியில் நாங்கள் இணைந்துள்ளோம். லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட வேட்பாளராக பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிறுத்தப்படுள்ளார். அவரை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்