விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கோட்டாட்சியர் பூர்ணிமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-09-08 20:52 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கோட்டாட்சியர் பூர்ணிமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவது குறித்து பல்வேறு இந்த அமைப்புகளுடன் கலந்தாலோசனை கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீர்த்தி வாசன் (கும்பகோணம்), ஜாபர்சாதிக் (திருவிடைமருதூர்), பூரணி (பாபநாசம்), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தாசில்தார்கள் வெங்கடேஸ்வரன், சுசீலா, பூங்குழலி, தீயணைப்பு துறை அலுவலர் பாலசுப்ரமணியம், பா.ஜனதா நிர்வாகிகள் சதீஷ், வாசன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் கா.பாலா மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் குட்டி சிவகுமார், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடுமையான விதிமுறைகள்

கூட்டத்தில் பேசிய இந்து அமைப்பின் நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய அரசு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய தயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் விதிமுறைகளை காரணம் காட்டி போலீசார் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் வழிபாடு நடத்தவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவை மன அமைதியுடன் கொண்டாட முடியாமல் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஒத்துழைக்க வேண்டும்

எனவே அரசின் விதிமுறைகளை தளர்த்தி அனைவரும் விநாயகர் சிலைகளை எந்தவித மன உளைச்சலும் இன்றி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய கோட்டாட்சியர் பூர்ணிமா அரசின் வழிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் கூட்டங்களில் இது குறித்து ஆலோசிக்கப்படும்.விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்