கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-06-23 16:46 GMT


கலந்தாய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் குழந்தை திருமணம் தடுப்பது தொடர்பாக புரோகிதர்கள், தர்கா தலைமை நிர்வாகிகள், கிறிஸ்தவ போதகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பத்திரிக்கை அச்சக உரிமையாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

18 வயது பூர்த்தியாகி...

திருமணம் செய்து வைக்கும் புரோகிதர்கள், தர்க்காக்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவ போதகர்கள் திருமண பெண்ணின் வயது 18 வயதிற்கு மேல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய சான்றுகள் பெற்று திருமணத்தை நடத்திட வேண்டும். மேலும் திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களுடைய மண்டபத்தில் நடைபெறும் திருமணத்தில் ஆண், பெண் இருவரின் திருமண வயது சரியாக உள்ளதா? என்பதை உரிய சான்றுகள் பெற்று திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்க வேண்டும். பத்திரிக்கை அச்சடும் அச்சக உரிமையாளர்கள் தங்களுடைய நிறுவனத்தில் அச்சிடப்படும் பெண்ணின் வயது 18 வயது பூர்த்தியாகியுள்ளதா? என்பதை கண்டறிந்து பத்திரிக்கையை அச்சிடும் பணி மேற்கொள்ள வேண்டும்.

உறுதிமொழி

அரசின் விதிமுறைகளை மீறி பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்க வற்புறுத்தினால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், சமூக நலத்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்கோ அல்லது 181 என்ற மகளிர் உதவி எண்ணிற்கோ தகவல் தெரிவித்திடலாம். தகவல் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும். குழந்தைத் திருமணத்தை தடுத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து அனைவரும் குழந்தைத் திருமணம் தடுப்பு தொடர்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை நல அலுவலர் தீபிகா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு போலீஸ் இன்ஸ்பெகடர் கலைச்செல்வி மற்றும் புரோகிதர்கள், தர்காக்களின் தலைமை நிர்வாகிகள், கிறிஸ்தவ போதகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பத்திரிக்கை அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்