டெங்கு பரவலை தடுக்க புதன்கிழமை தோறும் பள்ளி, கல்லூரிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி:கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்

டெங்கு பரவலை தடுக்க புதன்கிழமை தோறும் பள்ளி, கல்லூரிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.;

Update: 2023-09-27 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க, வாரந்தோறும் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு பரவலை தடுக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவுவதை தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காய்ச்சல் அதிகமாக காணப்படும் இடங்களில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்தல், மருத்துவக்குழுக்கள் மூலம் கண்காணித்தல், கொசு ஒழிப்பு புகைமருந்து அடித்தல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் துப்புரவு பணி

வாரந்தோறும் புதன்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோல ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களில் கொசு உற்பத்தி காரணிகளை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் உபயோகமற்ற டயர்களை அப்புறப்படுத்தும் முகாம்கள் நடத்த வேண்டும்.

குடிநீர்

அனைத்து பகுதிகளிலும் முறையான குளோரிசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோகிக்கும் குழாய்களில் கசிவோ அல்லது உடைப்போ ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும், டெங்கு மற்றும் காய்ச்சல் பரவல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். காய்ச்சல் கண்டறியப்பட்ட நபர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டெங்கு பரவலை தடுக்கும் விதமாக அலுவலர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்