முதல்-அமைச்சர் சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொரு நாளாக நிறைவேற்றி வருகிறோம்; அமைச்சர் பேச்சு

தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதிகளையும் ஒவ்வொரு நாளாக நிறைவேற்றி வருகிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-05-11 23:57 GMT

சென்னை,

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலை வகித்தார்.

முக்கிய விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 7 பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டையினையும், பணி காலத்தில் உயிரிழந்த அரசு அச்சகப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். மேலும், 1 லட்சத்து ஒன்றாவது தமிழரசு இதழ் சந்தாதாரருக்கு தமிழரசு இதழையும் வழங்கினார். இதேபோல், சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகர், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு 96 புதிய குடியிருப்புகளை ரூ.34 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

வாக்குறுதி நிறைவேற்றம்

நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையிலே சொன்னபடி, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும், ஒவ்வொரு நாளாக நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றியிருக்கிறோம், நிறைவேற்றியிருக்கிறோம். பத்திரிகையாளர் நலன் சார்ந்த அரசாக என்றுமே நம்முடைய தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, முந்தைய அரசால் போடப்பட்ட அத்தனை அவதூறு வழக்குகளையும் முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட்டு, அத்தனை வழக்குகளையும் ரத்து செய்தார். கொரோனா நேரத்தில், பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கெல்லாம் ரூ.5 ஆயிரம் நிதி உதவி கிடைக்க செய்ததும் நம்முடைய அரசு. தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்காக சேவை செய்ய நம்முடைய அரசு காத்துக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

எப்போதும் போல பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அரசுக்கு துணை நின்று, ஏதாவது தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டி, நல்லது செய்தால் எங்களை தட்டிக்கொடுத்து உங்களுடைய பணியை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேயர் பிரியா

முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் டாக்டர்.இரா.செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனர் மு.அருணா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஜான் எபினேசர் எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் த.மோகன், நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்