பேறுகால அவசர சிகிச்சை பிரிவில் மேலும் 3 மாடிகள் கட்ட மதிப்பீடு

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த பேறுகால சிகிச்சை பிரிவில் மேலும் 3 மாடிகள் கட்ட மதிப்பீடு தயார் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

Update: 2023-03-29 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த பேறுகால சிகிச்சை பிரிவில் மேலும் 3 மாடிகள் கட்ட மதிப்பீடு தயார் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

இடிக்க உத்தரவு

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மைய (சீமாங்) கட்டிடத்தில் இயங்கிவரும் பேறுகால அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள இடநெருக்கடியை தவிர்ப்பதற்காக, அதை விரிவாக்கம் ெசய்து மேலும் 3 மாடிகளை கட்ட மதிப்பீடு தயார் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நோயாளிகளுக்கான சமையல் கூடத்தை புதுப்பிக்கவும், பொதுக்கழிப்பிடத்தை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இயங்கி வரும் கூடுதல் கட்டிடத்திற்கு அருகில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் அதனை உடனே இடிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

புற்றுநோய் சிகிச்சை மையம்

மேலும் மருந்தகம் மற்றும் 'ஏ' பிரிவு கட்டிடத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டார். புற்றுநோய் சிகிச்சைக்காக புதிதாக அமைக்கப்படவுள்ள சிகிச்சை பிரிவு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இறந்த உடல்களை பதப்படுத்த புதிதாக குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி (பிரீஸர் பாக்ஸ்) வாங்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் புதிதாக அமைக்கவும், அரசு மருந்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் உயிரியல் மருத்துவ கழிவுகள் கட்டிடத்தை பார்வையிட்டு, அதன் விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஜோசப்சென், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் கலைவாணி, பாரதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அனீஷ், அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்