ஈரோடு மக்களின் ஒரே பொழுதுபோக்கு தலமாக இருக்கும் வ.உ.சி.பூங்காவை முழுமையாக சீரமைத்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மக்களின் ஒரே பொழுதுபோக்கு தலமாக விளங்கும் வ.உ.சி.பூங்காவை சீரமைத்து கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-10-03 20:26 GMT

ஈரோடு மக்களின் ஒரே பொழுதுபோக்கு தலமாக விளங்கும் வ.உ.சி.பூங்காவை சீரமைத்து கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு வ.உ.சி.பூங்கா

ஈரோடு மாநகரின் மத்தியில் இயற்கை எழில் சூழ அமைந்திருப்பது வ.உ.சி.பூங்கா. இந்த பூங்காவுக்கு பல சிறப்புகள் உண்டு. பேய்ச்சிப்பாறை என்ற பழம்பெயர் கொண்டு விளங்கும் இங்கிருந்துதான், ஈரோடு மாநகராட்சிக்கு குடிதண்ணீர் வினியோகம் நடக்கிறது.

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் உள்ள இந்த பூங்கா முன்காலத்தில் மிருக காட்சி சாலை மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தது. பின்னர் பொதுமக்கள் வந்து செல்லும் பூங்காவாக மாறியது. செயற்கை நீரூற்றுகள், செயற்கை குளங்கள் என்று அப்போதைய ஈரோடு நகராட்சி வ.உ.சி.பூங்காவை பராமரித்து வந்தது. பூங்காவின் ஒரு பகுதியில் குழந்தைகள் பூங்கா தனியாக உருவாக்கப்பட்டு அதில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே ஈரோடு வ.உ.சி.பூங்கா வேலை இல்லாதவர்கள் படுத்து தூங்கும் தலமாகவும், காதல் ஜோடிகள் பொழுதுபோக்கும் இடமாகவும் மாறியது. இதனால் குடும்ப பெண்கள் குழந்தைகளுடன் வந்து பொழுதுபோக்க ஏற்ற தலமாக இல்லாத நிலை ஏற்பட்டது.

புதுப்பிக்கும் பணிகள்

அதைத்தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. 4 ஆண்டுகள் கடந்தும் பூங்காவின் பணிகள் முறையாக முடிந்தபாடில்லை.

பூங்காவின் உள் பகுதியிலும் எந்த ஒரு பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை. குழந்தைகள் பூங்கா மட்டும் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவு பணிகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டன. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 1½ ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும், மாநகராட்சி தேர்தல் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகிவிட்ட பிறகும் பூங்காவை பராமரிக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோரிக்கை

இந்த நிலையில் பூங்காவை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் எழுப்பி உள்ளனர்.

இதுபற்றி ஈரோடு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கருப்புசாமி கூறியதாவது:-

ஒரு புறம் பூங்கா பராமரிப்பு முழுமையாக நடைபெறாத நிலையில், இருந்த ஒரே மைதானத்தையும் தற்காலிக சந்தை என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே இங்கு சந்தை செயல்படும் என்று கூறினார்கள். ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு சந்தை இயங்குவதால், வியாபாரிகளும் பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர். மாநகராட்சிக்கு வருவாய் தரும் கண்காட்சிகள், பொருட்காட்சிகள் அமைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடத்தவும் இடமில்லாத நிலையில் வ.உ.சி.பூங்காவை சீரமைக்கவும், மைதானத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூகுளும் ஏமாற்றியது

ஈரோடு வ.உ.சி. பூங்காவை நேற்று பார்வையிட வந்த திண்டல் வேப்பம்பாளையத்தை சேர்ந்த நர்மதா என்ற இளம்பெண் கூறியதாவது:-

நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை வ.உ.சி.பூங்காவுக்கு வந்திருந்தேன். அப்போது பூங்கா அழகாக இருந்தது. குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்க வசதியாக இருக்கும். அதே நினைப்பில் பூங்காவுக்கு வந்தேன். உள்ளே நுழையும்போதே சற்று ஏமாற்றமாக இருந்தது. நுழைவு சீட்டு ரூ.10 -க்கு விற்பனையாகிறது. எனவே உள்ளே ஏதேனும் நன்றாக இருக்கக்கூடும் என்று நம்பினேன். காரணம், இங்கு வருவதற்கு முன்பு வ.உ.சி.பூங்கா பற்றி கூகுள் இணையதளத்தில் பார்த்தேன். அதில் நன்றாக இருப்பதாகவே தெரிந்தது. அதை நம்பி வந்தால், கூகுளும் ஏமாற்றி விட்டதே என்ற கோபம்தான் வருகிறது.

தற்போது பள்ளிக்கூடங்கள் விடுமுறை என்பதால் வெளியூரில் இருந்து எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர்களையும் அழைத்துக்கொண்டு வந்து விட்டேன். வந்தபிறகுதான் ஏன் வந்தோம் என்று தோன்றுகிறது. இந்த பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏமாற்றம்

பூங்காவுக்கு வந்திருந்த ஜெபமாலை மேரி என்ற பெண் கூறியதாவது:-

நான் ஊட்டியில் இருந்து விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறேன். பூங்கா என்றதும் எனக்கு ஊட்டியில் உள்ள பூங்காக்கள்தான் நினைவுக்கு வந்தது. அதே எண்ணத்தில் இங்குள்ள வ.உ.சி. பூங்காவுக்கு வந்தால் மிகவும் கேவலமாக இருக்கிறது. எங்கும் புதர் மண்டிக்கிடக்கிறது. குழந்தைகள் விளையாட ஊஞ்சல் இல்லை. நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு அசிங்கமாக கிடக்கிறது. செங்கோட்டை வடிவ தண்ணீர் தொட்டி மட்டுமே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. மற்றபடி ஈரோடு போன்ற பெரிய நகரத்தில் இந்த பூங்கா திருஷ்டி பரிகாரமாக இருப்பதாகவே தோன்றுகிறது. மிகவும் ஏமாற்றத்தை உணர்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.6 கோடியே 42 லட்சம் பணி

பூங்கா பராமரிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

வ.உ.சி.பூங்கா மொத்தம் 8 ஏக்கர் 59 சென்ட் பரப்பளவு கொண்டது. சுமார் 6¼ ஏக்கரில் மெயின் பூங்காவும், 1¾ ஏக்கர் அளவுக்கு சிறுவர் பூங்காவும் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.6 கோடியே 42 லட்சம் செலவில் புதிய நடைபாதை அமைத்தல், அலங்கார ஓடு நடைபாதை அமைத்தல், நீரூற்றுபராமரிப்பு பணிகள், இருக்கைகள், ஊஞ்சல்கள் என பல வேலைகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகே மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் தெரிவித்ததுபோன்று பூங்காவின் உள்ளே ஏராளமான பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், எதுவும் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மிக மோசமாக இருக்கிறது.

பெருமை

தைப்பொங்கலின் போது காணும் பொங்கலை கொண்டாட பெண்கள் மட்டுமே குவியும் தனிப்பெருமை கொண்டது இந்த பூங்கா. ரம்ஜான் பண்டிகையின் அடுத்தநாள் முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக வந்து மகிழ்வது இந்த பூங்கா. ஆனால் இப்போது மனித நடமாட்டத்துக்கு கூட உகந்ததாக இல்லை.

ஈரோடு மாநகராட்சி நிர்வாகம், மேயர், துணை மேயர் மற்றும் இந்த பகுதி கவுன்சிலர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈரோடு மாவட்ட அமைச்சர் என்று அனைத்து தரப்பினரும் வ.உ.சி.பூங்காவின் மீது அக்கறை காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்