ஈரோடு- சத்தியமங்கலம் வரை ஆமை வேகத்தில் நடக்கும் 4 வழி சாலை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஈரோடு- சத்தியமங்கலம் வரை ஆமை வேகத்தில் நடைபெறும் 4 வழி சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-10-13 22:14 GMT

கவுந்தப்பாடி

ஈரோடு- சத்தியமங்கலம் வரை ஆமை வேகத்தில் நடைபெறும் 4 வழி சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

4 வழி சாலை

ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரை 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் இந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கண் எரிச்சல்

சாலையின் இருபுறங்களிலும் மண்ணை தோண்டி போட்டுவிட்டு பிறகு அதை கண்டுகொள்வதில்லை. மேலும் சாலை பணிக்காக சிறிய அளவிலான ஜல்லி கற்களை ரோட்டில் போட்டுவிட்டு பேருக்கு ரோடு ரோலர் மூலம் ஒருமுறை ஓட்டிவிட்டு அப்படியே விட்டுவிடுகின்றனர். தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் ஈரோடு- சத்தியமங்கலம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

அதுவும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் நிலை மிகவும் கஷ்டம். வாகனங்கள் செல்லும்போது ரோட்டில் போடப்பட்டு உள்ள ஜல்லி கற்களில் இருந்து கிளம்பும் தூசியானது புகைமூட்டம் போல் பறந்து இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதுடன், சில நேரங்களில் விபத்தில் சிக்கி விடுகிறார்கள்.

வியாபாரம் பாதிப்பு

அதுமட்டுமின்றி சாலை பணியின்போது குடிநீர் குழாய்களை சேதப்படுத்துவதால் உள்ளாட்சி நிர்வாகமும், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இதேபோல் டெலிபோன் கேபிள் நிறுவன பணியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் உள்பட பலரும் சிரமப்படுகின்றனர்.

கொரோனா தாக்கத்தில் இருந்து தற்போதுதான் வியாபார நிறுவனங்களும் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. சாலை பணியால் கடைகளுக்கு செல்லும் பாதைகள் முறையாக இல்லை. இதனால் பொதுமக்கள் கடைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதன்காரணமாக வியாபாரம் முறையாக நடைபெறுவதில்லை என வியாபாரிகள் வருத்தப்படுவதுடன், அவர்களுடைய வணிகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் குழியை தோண்டிவிட்டு மண்கொட்டாமல் சென்றுவிடுகின்றனர்.

எனவே சாலை பணிகளை முறையாக கண்காணித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்பட பல தரப்பினரும் பாதிக்காத வகையில் சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்