ஈரோடு கடைவீதியில் தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிகள் வாங்க ஈரோடு கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2022-10-16 21:07 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிகள் வாங்க ஈரோடு கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிகள் விற்பனை கடந்த சில தினங்களாக மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு மாநகர் பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

குறிப்பாக ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஈரோடு ஆர்.கே.வி.ரோடு கடைவீதி, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி, மேட்டூர் ரோடு ஆகிய இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிகள் மட்டும் அல்லாமல் புதிய பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் போலீசார் நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினர். மேலும் போக்குவரத்து போலீசார் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மீது போலீசார் ஏறி நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மாநகரில் முக்கிய கடைவீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டத்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி போலீசார் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்