ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனா்

Update: 2023-10-19 20:42 GMT

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் நடத்தும் 3 நாட்கள் சோதனை நேற்று தொடங்கியது.

அரசு ஆஸ்பத்திரிக்கு தரச்சான்று

ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அரசு ஆஸ்பத்திரி மாவட்டத்தின் தலைமை ஆஸ்பத்திரியாக உள்ளது. இந்த ஆஸ்பத்திரி மத்திய அரசின் மூலம் தேசிய தரச்சான்று பெற்று இருக்கிறது. இந்த தரம் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் சோதனை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது.

அதன்படி தரச்சான்றுக்கான காலம் இந்த ஆண்டுடன் முடிவதையொட்டி தேசிய தரச்சான்று நிறுவனத்தின் மருத்துவர்கள் குழுவினர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 3 நாட்கள் மதிப்பீட்டு சோதனை நடத்துகிறார்கள். டாக்டர் பி.குணஷீலா தலைமையில் டாக்டர் தருண்குமார் ரவி மற்றும் சே ஸ்ரீகாந்த் ராஜூ ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

மதிப்பீடு

குழுவினர் அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு என்று அனைத்து பகுதிகளிலும் நேரடியாக சென்று வார்டுகளின் வசதி, சிகிச்சை முறை, மருத்துவம், கவனிப்பு என்று பல்வேறு தலைப்புகளில் மதிப்பீடு செய்தனர்.

இந்த சோதனையின் போது மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் வி.அசோக், ஈரோடு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அம்பிகா, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், தலைமை செவிலியர் ஷகிலா மற்றும் மருத்துவக்குழுவினர் உடன் இருந்தனர்.

அறிக்கை

தேசிய தரச்சான்று மதிப்பீட்டுக்குழுவினர் 3 பிரிவாக சென்று ஒவ்வொரு பகுதியிலும் சோதனைகள் மேற்கொண்டனர். நோயாளிகளிடமும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தனர்.

தேசிய தர உத்தரவாத தர நிலைகள், பிரசவ வார்டு தர மேம்பாடு ஆகியவற்றுடன் இந்த ஆண்டு பச்சிளம் குழந்தைகள் பிரிவில் வழங்கப்பட்டு உள்ள தரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் மதிப்பீடு செய்யப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். ஒரு மாத காலத்துக்கு பின்னர் தரச்சான்று தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்