ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு தயாா் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
தனி வார்டு
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் டெங்கு தடுப்பு பணிக்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிக்காக 20 மேற்பார்வையாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் 320 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 20 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ரத்த பரிசோதனை
இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியின் உறைவிட டாக்டர் கவிதா கூறியதாவது:-
ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக தினமும் 20 முதல் 30 நோயாளிகள் வருகின்றனர். அதில் அதிக காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு என யாரும் சிகிச்சையில் இல்லை. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக நோயாளிகள் ஆஸ்பத்திாியில் சேர்ந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.