ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2023-02-03 22:58 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. 4-வது நாளான நேற்று தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதற்காக அவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தலைமை தேர்தல் பணிமனையில் இருந்து காரில் புறப்பட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

வேட்புமனு தாக்கல்

அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் செல்வபெருந்தகை, எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி (ம.தி.மு.க.), அந்தியூர் ப.செல்வராஜ் (தி.மு.க.), தி.மு.க கொள்கை விளக்க அணி துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் உடன் வந்தனர். வேட்புமனுவில் அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்ட வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்புமனுவை வழங்கினார். அதை அவர் பெற்றுக் கொண்டார்.

இதுவரை 36 பேர் மனு

மேலும் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவபிரசாந்த், இவருக்கு மாற்று வேட்பாளராக விசாலாட்சி, அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் உள்பட நேற்று ஒரேநாளில் 16 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட கடந்த 4 நாட்களில் மொத்தம் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்