ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார்.
இதனால் அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆளும் தி.மு.க.வை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் அந்த தொகுதியை ஒதுக்கியது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி
இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது அணி தனித்தனியாக களத்தில் இறங்கும் என்று தெரிவித்து உள்ளனர். இதற்காக பா.ஜ.க. உள்ளிட்ட தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்கள். ஆனால் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. பா.ம.க. போட்டி இல்லை என்று அறிவித்து விட்டது.
கமல்ஹாசனுடன் சந்திப்பு
இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த 23-ந்தேதி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன், இரா.முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து காங்கிரசுக்கு அவர் ஆதரவு கோரினார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே இடைத்தேர்தல் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணைத்தலைவர்கள் தங்கவேலு, ஏ.ஜி.மவுரியா உள்பட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரசுக்கு ஆதரவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், எனது நண்பரும், பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஏகமனதாக முடிவு எடுத்துள்ளோம்.
அவரது வெற்றிக்காக நானும், எனது கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம்.
18 வயது பூர்த்தி அடைந்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.
தேர்தல் பொறுப்பாளர்
இந்த இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பொறுப்பாளராக அ.அருணாசலம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழகத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு. இது இப்போதைய முடிவு. இன்னும் 1 ஆண்டு கழித்து எடுக்கவேண்டிய முடிவை இப்போது யாரும் பெறமுடியாது.
மனதில் இருந்து வரும் அரசியல்
இதனைத்தொடர்ந்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செல்வீர்களா?
பதில்:- கண்டிப்பாக ஒத்துழைப்போம். வெற்றிபெற எல்லா உதவிகளையும் செய்வோம் என்றபோது, அதுவும் (பிரசாரம்) உட்பட்டு விடுகிறது. இதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது என் மனதில் இருந்து வரும் அரசியல்.
தேசம் என்று வரும்போது...
கேள்வி:- இந்த முடிவை எடுக்க ஏன் தயக்கம்?
பதில்:- இது தயக்கம் அல்ல. இது பரந்த நோக்கம். இன்னும் 12 மாதங்களே உள்ளது. தமிழகத்துக்கும், தேசத்துக்கும்... இதனை முன்னோட்டம் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதே மாதிரிதான் என்று எடுத்துக்கொள்ள முடியாது.
காலமும், பேச்சும், அரசியலும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் அனைவருமே சகோதரர்கள்தான். எதிர்க்கட்சிகளில் இருந்தாலும் கூட. ஆனால் நாளை தேசம் என்று வரும்போது அந்த கோட்டையும் அழிக்க வேண்டி வரலாம். போர் மூளும்போது கட்சி என்றெல்லாம் பார்க்கக்கூடாது. கொள்கைகள் பிடிக்கா விட்டாலும் கூட, தேசத்துக்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் எனது அரசியல். தேச ஒற்றுமைக்காக கொள்கைகளை தளர்த்தி சேரலாம்.
ஆசை இருக்கக்கூடாதா?
கேள்வி:- கமல்ஹாசனுக்கு எம்.பி.யாக வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதாக விமர்சிக்கிறார்களே?
பதில்:- ஏன் கூடாது. கமல்ஹாசன் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்கே கோபப்படாத போது, எம்.பி.யாக வேண்டும் என்ற குரலை ஏன் கிண்டல் அடிக்கிறீர்கள்? ஆசை இருக்கலாம். என் ஆசை என்பது மக்களுக்கு பணி செய்வதுதான்.
மேற்கண்டவாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
அறிக்கை
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தன் தனிப்பட்ட வாழ்வின் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தனது சொந்த துயரத்தையும் மீறி மக்கள் பணி செய்ய மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் நண்பர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை பாராட்டுகிறேன். இன்றிருக்கும் அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்தோடு எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு எள் முனையளவும் கருத்து வேறுபாடு இல்லை. எனவே இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெற செய்வோம்.
ஜனநாயக சக்திகளின் குரல்வளையும், கருத்துரிமையும் ஒடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் கொல்லைப்புறம் வழியாக நுழைந்து, மாநில உரிமைகளில் தலையிடுவதும் இடையூறு செய்வதும் தொடர்கிறது.
இந்த ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றியாக வேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மண், மொழி, மக்களைக் காக்க கட்சிக்கோடுகளை அழித்து விட்டு கரம் கோர்க்க நானும் மக்கள் நீதி மய்யமும் என்றும் தயங்கியதில்லை.
தமிழ்நாடு சமத்துவத்தின், சகோதரத்துவத்தின், சமூகநீதியின் மண் என்பதை மீண்டும் இந்தியா முழுக்க ஓங்கி ஒலிக்கச் செய்வோம். ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழ்நாடு வாழ்க.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.