ஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் கொலை வழக்கு - சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை

தி.மு.க. பெண் கவுன்சிலர் ரூபா கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-27 10:21 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சென்னசமுத்திரம் பேரூராட்சியின் தி.மு.க. கவுன்சிலராக பணியாற்றி வந்தவர் ரூபா. இவர் கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவரது வீட்டில் கடந்த 5 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் காலையில் வேலைக்கு புறப்பட்ட ரூபா, இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தனது தாயாரை காணவில்லை என ரூபாவின் மகன், கொடுமுடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவிலுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் ரூபாவின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று ரூபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில், கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கதிர்வேல் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய 2 பேரைப்பிடித்து க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த தம்பதியிடம் இருந்து ரூபா அணிந்திருந்த 5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் விசாரணைக்குப் பின் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்