ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு;த.ம.மு.க. தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி
ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்று த.ம.மு.க. தலைவர் ஜான் பாண்டியன் கூறினாா்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை தாங்கினார். த.ம.மு.க. நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. மின் கட்டண உயர்வு தவறான செயல் ஆகும். இதனால் ஏழை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் கொடுப்போம் என்றார்கள். ஆனால் ரூ.1,000-ம் கூட இன்னும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளது. தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய ஒருபோதும் வாய்ப்பில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை. எங்களிடம் கேட்டால் ஆதரவு கொடுப்போம். ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரையில் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மயில்துரையன், தொழிற்சங்க செயலாளர் குமார், மாநகர செயலாளர் குணேசேகரன், கொடுமுடி ஒன்றிய தலைவர் சக்திவேல் பாண்டியன், இளைஞர் அணி மாநகர செயலாளர் சிவா பாண்டியன், சென்னிமலை ஒன்றிய தலைவர் அப்பார் ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் லிங்குசாமி, சுப்பிரமணி, மருதமுத்து, ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.