துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும்
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோரிக்கை மனு
தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கிரிஷா தலைமையில், தூய்மை பணியாளர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதம் 5-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
பணி நேரத்தை...
நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மாதாந்திர ஊதியம் மற்றும் நிலுவை தொகை, பல மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை கிராம ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து தொகை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும்.
தூய்மை காவலர்களின் பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும். செங்கம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.