பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா

பெரம்பலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா மாணவ-மாணவிகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-13 19:00 GMT

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். மேலும் கல்லூரி நுழைவு வாயிலில் வாழை மரம், கரும்பு கட்டுகள் கட்டப்பட்டிருந்தது. வண்ண கோலமிடப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக ஒவ்வொரு துறையை சார்ந்த மாணவ-மாணவிகள் மண் பானை வைத்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கிய போது பொங்கலோ.. பொங்கலோ... என்று சத்தமாக கூறி குதூகலத்துடன் இந்த சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழந்தனர். பொங்கலிடுவதற்கு கல்லூரி பேராசிரியர்களும் உதவி புரிந்தனர். பின்னர் அவர்கள் பொங்கல் பானை முன்பு தங்களது நண்பர்களுடன் நின்று கொண்டு செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாணவர்கள் தப்பாட்டமும், மாணவிகள் கும்மியாட்டமும் ஆடினர். இதே போல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்