பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே இதனை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-02-02 18:04 GMT

வாரச்சந்தை

பெரம்பலூரில் மரகத வல்லித்தாயார் சமேத மதன கோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் துறையூர் சாலையில் தெப்பக்குளம் அருகே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயங்கி வந்த வாரச்சந்தை ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு சந்தை செயல்பட்டு வந்தது. ஏறத்தாழ ஒரு ஏக்கர் பரப்பிலான இந்த வாரச்சந்தை வடக்குமாதவி சாலையில் உழவர் சந்தை அருகே மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

வாரச்சந்தை இருந்த இடத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் வகையில் ஒருங்கிணைந்த புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டிடம், ஆய்வகங்கள், மருந்தகம், அறுவை அரங்கம், சிறப்பு மருத்துவம், புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு ஆகியவற்றுடன் கூடிய பன்மாடி கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தொற்று நோய் பரவும் அபாயம்

இக்கட்டிடத்தின் தென்பகுதியில் ஏற்கனவே இருந்த வாரச்சந்தையின் முகப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கும், பொதுமக்கள் புழக்கத்திற்காகவும் விடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மருத்துவக்கழிவுகள், நோயாளிகள் பயன்படுத்திய கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதேபோல் இப்பகுதியில் பொதுமக்கள் தங்களது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் ஓட்டல்களில் சேகரமாகும் கழிவுகளை கொட்டி வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு மருத்துவமனை முன்பு கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

மருத்துவ கழிவுகள்

பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த ரத்தினம் அசோக்குமார்:- அரசு மருத்துவமனையின் விரிவாக்க பன்மாடி கட்டிடத்தின் முகப்பு பகுதியில் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதேபோல் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது இந்த குப்பைகளை அகற்றாததால், துறையூர் சாலையில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து நடந்து செல்லும்போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவக்கழிவுகளில் உள்ள ஊசிகள், டிரிப் எனப்படும் நரம்பின் உட்செலுத்தும் மருத்துவ உபகரணங்கள் மழைநேரங்களில் தண்ணீரில் அடித்துக்கொண்டு சாலைக்கும், ஓடைக்கால்வாய்க்கும் வந்துவிடுகின்றன. இதனால் ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதை தடைபடுகிறது. இந்த மருத்துவக்கழிவுகளை அந்த இடத்தில் கொட்டாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் துர்நாற்றம்

பெரம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சோ்ந்த கஜேந்திரன்:- மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மீதமான உணவு பொருட்கள், சில சமயங்களில் மருத்துவ கழிவுகளும் கூட மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் அருகே உள்ள பகுதியில் கொட்டப்படுகிறது. இதனை தினந்தோறும் அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை. இதனால் அவை மலைபோல் குவிந்து வருகிறது. மேலும் மழை பெய்யும் போது நனைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் புதிய கட்டிடத்தில் உள்நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கி இருப்பவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதனருகே பள்ளி, அம்மா உணவகம், துறையூர் செல்லும் சாலை, பஸ் நிறுத்தம், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்தவாறு சென்று வருகின்றனர். மேலும் அந்த இடத்தின் அருகே தான் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. சில சமயங்களில் வாகனங்கள் மீதும் குப்பைகள் கொட்டப்படுகிறது. எனவே மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் கொட்டாமல், குப்பை தொட்டிகள் மூலம் சேகரித்து உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதார சீர்கேடு

குன்னம் தாலுகா, வடக்கலூரை சேர்ந்த ரமேஷ்:- பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஆனால் மருத்துவமனை புதிய கட்டிட நுழைவு வாயில் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த குப்பைகளை நாய்கள், குரங்குகள், கால்நடைகள் உணவு பொருட்களை தேடி கிளறி விடுவதால், அவை காற்றில் பறந்து பரவி கிடக்கின்றன. மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

பெரம்பலூரை சேர்ந்த சிவக்குமார்:- பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு மருத்துவக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதேபோன்று பெரம்பலூரில் பிரதான சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் நகரின் அழகு மற்றும் சுகாதாரம் கெடுவதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை விரிவுபடுத்தி கட்ட வேண்டும். மேலும் மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்