கோவில்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது-அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

கோவில்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றன என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2023-05-13 18:45 GMT

காரைக்குடி

கோவில்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றன என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

கருத்தரங்கு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கக கல்வியியல் துறை மற்றும் வரலாற்று துறை இணைந்து இந்திய பண்பாடு, மரபு, கோவில், கட்டிடக்கலை போன்றவற்றை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் என்ற தலைப்பிலான 3 நாள் சர்வதேச கருத்தரங்கினை நடத்தியது. அதன் நிறைவு விழா, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார். கருத்தரங்க அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

கோவில்கள்

இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

உலகிற்கே மூத்தகுடி தமிழ்குடி, ஒட்டுமொத்த உலகத்திற்கும் பயனளிக்கக்கூடிய அரிய கருத்துக்களை நமது கலாசாரம் கொடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் நமது முன்னோர்கள் அளித்த அரிய பங்களிப்பு ஆகும். சேர, சோழ. பாண்டிய மன்னர்கள் காலத்தில் நமது கலாசாரம் பண்பாடு மற்றும் கோவில் கட்டிடக்கலை போன்றவை சிறந்து விளங்கியது. தற்போது இந்து அறநிலையத்துறையின் கீழ் தமிழகத்தில் 45 ஆயிரம் கோவில்கள் உள்ளன. கோவில்கள் இருக்கும் இடத்தில் நந்தவனங்கள் இருந்தன. அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டதோடு, பல்லுயிர் சார்ந்த உயிரினங்கள் வாழும் பகுதியாகவும் கோவில்கள் விளங்கின.

அதோடு மட்டுமல்லாமல் ஆக்சிஜனை அளிக்கக்கூடிய ஆலமரம், அரசமரம் போன்றவைகள் பெரும்பான்மையான கோவில்களில் இருக்கிறது. நமது முன்னோர்கள் உருவாக்கிய கட்டிடக்கலையை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். தமிழர்களின் பெருமைகள் வரலாற்றில் எப்போதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. பழமை எங்கு சென்றாலும் மாறாது என்றும் நினைவுபடுத்தக்கூடியது.

இவ்வாறு பேசினார்.

கட்டுரைகள்

கருத்தரங்கில் கீழடி அகழாய்வு ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தொன்மை வாய்ந்த வைகை நதி, நாகரிகம் சார்ந்த தமிழர் பண்பாடு குறித்து அறிவியல், வரலாற்றுச் சான்றுகளையும் ஒருங்கிணைத்து உரையாற்றினார்.

அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ராஜமோகன் வாழ்த்துரை வழங்கினார். 3 நாள் பன்னாட்டு கருத்தரங்கில் 80 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்