பழைய மின்கட்டணத்தை அமல்படுத்தக்கோரி முதல்-அமைச்சருக்கு பதிவு தபால் அனுப்பிய தொழில் முனைவோர்கள்

பழைய மின்கட்டணத்தை அமல்படுத்தக்கோரி முதல்-அமைச்சருக்கு தொழில் முனைவோர்கள் பதிவு தபால் அனுப்பினர்.

Update: 2023-09-14 22:06 GMT

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலை பழைய மின் கட்டண விகிதத்தை அமல்படுத்தக்கோரியும், மாநிலம் முழுவதும் தொழில்முனைவோர்கள் முதல்-அமைச்சருக்கு பதிவு தபால் அனுப்பினர். அதன்படி, திருச்சியை சேர்ந்த தொழில்முனைவோர்கள் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அப்போது டிடிசியா குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர் சங்க தலைவர் ராஜப்பா தலைமையில் அலுமினியம் உற்பத்தியாளர்கள், கிரில் தயாரிப்பாளர்கள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், பாலிதீன் உற்பத்தியாளர்கள் என்று பல்வேறு குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டு தபால் அனுப்பினர். சிறு தொழிற்சாலைகளுக்கு ஒரே பிரிவில் பழைய கட்டணமான ரூ.35-க்கு மாற்றி அமைக்கவேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், மீண்டும் குறு தொழில் நிறுவனங்களுக்கு 12 கி.வோ. கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். முன்னதாக பதிவு தபால் அனுப்ப வந்த தொழில்முனைவோரை தபால் நிலைய வாசலில் போலீசார் தடுத்து நிறுத்தி, போராட்டம் நடத்த யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்? என்று கேட்டதுடன், ஒருவரிடம் அனைத்து தபால்களையும் கொடுத்து அனுப்புங்கள் என்று கூறினார்கள். அதற்கு, நாங்கள் தனித்தனியாக எங்கள் நிறுவனம் சார்பில் தபால் அனுப்ப வந்துள்ளோம். தபால் அனுப்ப யாரிடம் அனுமதி வாங்க வேண்டும். எங்களை எப்படி தடுக்கலாம். நாங்கள் என்ன போராட்டமா நடத்த வந்துள்ளோம். என்று கேட்டனர். இதனால் தொழில்முனைவேருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சமாளித்து உள்ளே சென்று தபால் அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்