கால்நடை தொழில் தொடங்கதொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை தொழில் தொடங்க தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-10-17 18:45 GMT

பிரதமரின், ஆத்மா நிர்பார் பாரத் அபியான் தொகுப்பின் கீழ் ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் தனிப்பட்ட தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஆகியவை பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டல் உள்கட்டமைப்பு, கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், மாட்டினம் மேம்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் கால்நடை இனப்பெருக்க பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை அமைத்தல், விலங்கு கழிவுகள் மூலம் மேம்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில் தொடங்க விண்ணப்பம் செய்து நிதி உதவி பெறலாம்.

இத்திட்டத்தின் நோக்கங்கள், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் திறன், தயாரிப்புகளை பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட பால், இறைச்சி சந்தைக்கு அமைப்புசாரா கிராமப்புற பால் மற்றும் இறைச்சி உற்பத்தியாளர்கள் அதிகளவு பயன்பெற இயலும். இதனால் உற்பத்தியாளர்களுக்கு சந்தையில் விலை உயர்வு கிடைக்கும். உள்நாட்டு நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் இறைச்சி பொருட்கள் கிடைக்கச்செய்யலாம்.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் மூலம் மாடு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, பன்றி மற்றும் கோழி இனங்களுக்கு தரமான செறிவூட்டப்பட்ட தீவனம் மற்றும் மலிவு விலையில் சமர்ச்சீர் உணவு வழங்க இயலும். இத்திட்டத்தில் மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாக பெறமுடியும். இதில் பயனாளிகள் பங்களிப்பாக சிறு, குறு தொழில்கள் தொடங்க 10 சதவீதம் முதல் 15 சதவீதம் தொகையும், மீதமுள்ள இனங்களில் 25 சதவீதம் பங்குத்தொகையும் அளிக்கப்பட வேண்டும். மேலும் 3 சதவீதம் வரை வட்டி குறைப்பிற்கு அனைத்து தொழில்முனைவோரும் தகுதியாவார்கள். எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான தொழில்முனைவோரால் தங்களது விரிவான அறிக்கையை ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்கள் குறிப்பிடும் வங்கிக்கு கடன் வழங்க பரிந்துரைக்கப்படும்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர், இதர அமைப்புகள், கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்டுள்ள தொழில்கள் தொடங்க நிதி உதவி பெறுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்திட மாவட்ட வேளாண்மை விஞ்ஞானக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகி உரிய ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்