கர்நாடக மாநில வரவேற்பு நுழைவுவாயில் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்தது

கர்நாடக மாநில வரவேற்பு நுழைவுவாயில் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இதையொட்டி கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-25 18:45 GMT

ஓசூர்

கர்நாடக மாநில வரவேற்பு நுழைவுவாயில் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இதையொட்டி கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி மோதி கவிழ்ந்தது

ஓசூரில் இருந்து எம்-சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்றது. தமிழகத்தின் மாநில எல்லையான ஜூஜூவாடியை கடந்து கர்நாடக மாநில நுழைவு பகுதி அருகே லாரி சென்றது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி அங்கு உள்ள வரவேற்பு நுழைவுவாயில் மீது மோதி கவிழ்ந்தது.

இதனால் நுழைவு வாயிலின் ஆர்ச்சின் ஒருபகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. பல ஆண்டுகளாக கர்நாடகா மாநிலத்தின் நினைவு சின்னமாக விளங்கி வரும் நுழைவுவாயில் சேதமடைந்த தகவல் அறிந்து கன்னட அமைப்பினர் அங்கு குவிந்தனர். நுழைவுவாயில் சேதமடைந்ததை கண்டித்து, கன்னட ஜாக்குதி வேதிகே உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தமிழக-கர்நாடக நுழைவு பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர், கன்னட அமைப்பு நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நுழைவுவாயில் மற்றும் அதன் சுற்றுப்பகுதி சீரமைக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து கன்னட அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்