பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

Update: 2023-06-12 19:15 GMT

கோவை

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

கோவை மாவட்டத்தில் 781 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 232 நடுநிலைப்பள்ளிகள், 83 உயர்நிலைப் பள்ளிகள், 116 மேல்நிலைப்பள்ளிகள் என்று மொத்தம் 1,212 அரசு பள்ளிகளும், கோவை மாநகரில் 17 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 16 நடுநிலைப்பள்ளிகள், 40 தொடக்கப்பள்ளிகள் என்று 84 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. பின்னர் 6-ந் தேதி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேற்றும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் (புதன்கிழமை) திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு

இதையடுத்து நேற்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் காலையில் மாணவ-மாணவிகள் ஆவலுடன் புறப்பட்டு பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு சில பள்ளிகளில் பேண்டு-வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதுபோன்று சில பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து அவர்களை இன்முகத்துடன் ஆசிரியர்கள் வரவேற்றனர். விடுமுறை முடிந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்ததால் அவர்கள் தங்களின் தோழிகள், நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

சில மாணவர்கள் தங்கள் நண்பர்களை கட்டிப்பிடித்து ஆரத்தழுவி மகிழ்ந்தனர். ஒருவரை ஒருவர் சந்தித்து கைகளை குலுக்கி மகிழ்ச்சி பொங்க அன்பை பரிமாறிக்கொண்டனர். பின்னர் விடுமுறையில் தாங்கள் சென்று வந்த இடங்கள், பார்த்து மகிழ்ந்த சுற்றுலா மையங்கள், உறவினர்கள் வீடுகளில் நடந்த சம்பவங்களை ஒருவருக்கு ஒருவர் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கிடையே நேற்று முதல்நாள் என்பதால் சில பெற்றோர் பள்ளிகளுக்கே சென்று தங்கள் குழந்தைகளை விட்டுச்சென்றனர். அதுபோன்று பள்ளி முடிந்ததும் அவர்கள் வந்து தங்கள் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச்சென்றனர்.

பாடப்புத்தகங்கள்

அதுபோன்று கோவை புறநகர் பகுதிகளில் உள்ள காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூர், அன்னூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாநகர பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், புறநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளிகள் திறந்த நேற்றே மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவற்றை மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் வாங்கினார்கள்.

தயார் நிலை

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச பாடப்புத்தகங்கள் நேற்றே வழங்கப்பட்டு விட்டது. நேற்று வராத மாணவர்களுக்கு அவர்கள் வந்ததும் வழங்கப்படும். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளைதான் (புதன்கிழமை) பள்ளி திறக்கப்படுகிறது. இதற்காக தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களுக்கு பள்ளிகள் திறந்ததும் பாடப்புத்தகம் வழங்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்