பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update:2023-06-15 01:15 IST

பொள்ளாச்சி

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 12-ந் தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. குழந்தைகள் புத்தக பைகளை சுமந்து கொண்டு உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். குறிப்பாக 1-ம் வகுப்பில் சேர்க்க தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள். முதல் நாள் என்பதால் பாடங்களை சொல்லி கொடுக்காமல், கதைகளை சொல்லி கொடுத்தனர். மேலும் எழுத்துப்பயிற்சி, வாசிப்பு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.

கிரீடம்

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு குழந்தைகளுக்கு தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் பூ கொடுத்தும், காகித கீரிடம் வைத்தும் வரவேற்றனர். பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது.

வால்பாறை பகுதியில் தொடக்கப்பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். நல்லகாத்து எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ரஞ்சித் குமார் மற்றும் ஆசிரியர்கள் கிரீடம் அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர். மேலும் குளிர்கால உடை, மழைக்கோட்டு ஆகியவை வழங்கப்பட்டது. அவர்களது பெற்றோருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பறை இசைத்து...

கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மேலாண்மை குழு தலைவர் காயத்ரி தலைமையில் பறை மற்றும் கும்பி அடித்தும், கிராமிய பாடல் பாடியும் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இனிப்பு, ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது.

இதில் வடக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஸ்வப்னா, ஆசிரிய பயிற்றுநர் சுகந்தி லட்சுமி, தலைமை ஆசிரியர் தினகரன், ஆசிரியை சத்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் அனைவரும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்