முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
செம்பட்டு:
உற்சாக வரவேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், திருநாவுக்கரசர் எம்.பி., மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி வந்தார்.
முதல்-அமைச்சரை பார்த்ததும், அங்கு திரண்டு இருந்த பலர் உற்சாகமாக கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்-அமைச்சரை வாழ்த்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். பின்னர் இரவு 10 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றார். இதையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.