உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்; பூங்கொத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்

கோடை விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.;

Update: 2023-06-12 19:19 GMT

கோடை விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பள்ளிகள் மீண்டும் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதியும் (நேற்று), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் (நாளை) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் பிளஸ்-2 வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வந்தனர். முதல் நாள் என்பதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தனர். மேலும் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தக பை, தண்ணீர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்பட பள்ளிக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பொருட்களை பல பெற்றோர் புதிதாக வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இலவசபாடப்புத்தகங்கள்

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் நேற்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சில பள்ளிகளில் 1½ மாத விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும் கைகுலுக்கியும் வரவேற்றனர்.ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது. கல்வியின் அவசியத்தை மாணவ-மாணவிகளுக்கு உணர்த்தி அவர்களின் கல்வியை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

விடுதி மாணவர்கள்

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம், மணப்பாறை, துறையூர், தொட்டியம், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அதே நேரம் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் பெட்டி, படுக்கைகளுடன் வந்தனர். அவர்களை பெற்றோர்கள் பள்ளியில் விட்டு, விட்டுச்சென்றனர்.

தா.பேட்டை,திருவெறும்பூர்

தா.பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் மாணவர்கள் பள்ளிக்கு அதிகளவில் வருகை தந்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள பாய்லர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளை இரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். மேலும் இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், விடுமுறை நாட்களில் எங்களது நண்பர்களை பார்க்காமல் இருந்து வந்தோம். பள்ளி திறந்தவுடன் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்