தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்துதென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தின.

Update: 2023-08-26 21:45 GMT

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தின.

காட்டு யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி வருகின்றன. அவ்வாறு வெளியேறும் காட்டுயானைகள் வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் இருக்கும் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.

இந்தநிலையில் தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட மரியபுரத்தை சேர்ந்தவர் ஜோசப். இவர் 3 ஏக்கரில் தென்னை மரங்களை பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டுயானைகள் ஜோசப்பின் தோட்டத்துக்குள் நுழைந்தன. பின்னர் தென்னை மரங்களின் ஓலைகளை முறித்தும், சிறிய மரங்களை வேரோடு சாய்த்தும் சேதப்படுத்தின.

அகழி அமைக்க கோரிக்கை

சத்தம் கேட்டு ஒன்று திரண்டு வந்த விவசாயிகள் ஒலி எழுப்பியும், தீப்பந்தம் காட்டியும் காட்டுயானைகளை விரட்ட முயன்றனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் சென்றன. யானைகள் புகுந்ததில் தோட்டத்தில் இருந்த 60 தென்னை மரங்கள் சேதமடைந்தன.

காட்டுயானைகள் வழக்கமாக வெளியேறும் இடங்களில் வனத்துறையினர் அகழி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்