கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரம் திருட்டு

நாகர்கோவிலில் பேக்கரி கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரத்தை திருடிய ஆசாமி அங்கிருந்த லட்டு, ஐஸ்கிரீமையும் விட்டு வைக்காமல் அள்ளிச் சென்றுள்ளார். அந்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-19 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பேக்கரி கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரத்தை திருடிய ஆசாமி அங்கிருந்த லட்டு, ஐஸ்கிரீமையும் விட்டு வைக்காமல் அள்ளிச் சென்றுள்ளார். அந்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

பேக்கரியில் திருட்டு

குமரி மாவட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் ஆங்காங்கே திருட்டு சம்பவம் அரங்கேறத் தான் செய்கிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள ஒரு பேக்கரி கடைக்குள் புகுந்து மர்ம ஆசாமி கைவரிசையில் ஈடுபட்டுள்ளார். அதாவது கோட்டாரில் கண்ணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல் இரவில் பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.10 ஆயிரம்  மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்களும் திருடப்பட்டிருந்தது.

மர்ம ஆசாமி உருவம் சிக்கியது

இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு கண்ணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசாமி பணத்தை திருடியதோடு லட்டு, ஐஸ்கிரீம் ஆகியவற்றையும் அள்ளிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஆசாமி ஒருவர் பேக்கரிக்குள் புகுந்து ஒவ்வொரு பொருட்களையும் பொறுமையாக பாா்த்து திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. கண்காணிப்பு கேமராவில் ஆசாமியின் உருவம் தெளிவாக பதிவாகி உள்ளது. அதனை கைப்பற்றி போலீசார் ஆசாமியை தேடிவருகின்றனர்.

வைரல்

இதற்கிடையே பேக்கரிக்குள் ஆசாமி புகுந்து திருட்டில் ஈடுபடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்