தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-12-09 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர் நலச்சங்க பேரவையினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள எச்.டி. பாக்ஸ்களை மானிய விலையில் தவணை முறையில் அரசு ஆபரேட்டர்களுக்கு வழங்க வேண்டும். தனியார் பாக்ஸ்களுக்கு இணையாக அரசு கேபிளில் உள்ளூர் சானல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். 2012-ம் பணிபுரிந்த தாசில்தார், எங்களை கலந்து ஆலோசிக்காமல் ஏற்கனவே உள்ள அனலாக் இணைப்பின் எண்ணிக்கையில் இருந்து 20 சதவீத இணைப்பை தன்னிச்சையாக உயர்த்தியதால் ஆபரேட்டர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் கூடுதல் சுமை ஏற்பட்டு தவணை நிலுவை என்னும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு இணைப்பு எண்ணிக்கையை மறுஆய்வு செய்து தவணை நிலுவையை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு கேபிள் சிக்னல் எடுத்து தொழில் செய்து வரும் ஆபரேட்டர்களுக்கு தொழில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தனியார் சிக்னல் எடுத்து நமது பகுதியில் அத்துமீறி நுழைந்து அரசு பாக்ஸ்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அரசிற்கான வருவாயை தடை செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தனியார் அமைப்புகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக தொலைதொடர்பு ஆணையத்தின் சட்டவடிவை மாறுதல் செய்யவும் மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்