அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-09-08 09:18 GMT

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசுப் பொதுப் பணியாளர் சட்டத்தின் பிரிவு-26-ன் கீழ் 2016-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

எனவே ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய உரிய சட்டத் திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்