அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை

சிவகங்கை, காரைக்குடி மற்றும் மானாமதுரையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-28 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை, காரைக்குடி மற்றும் மானாமதுரையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் சேர்க்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி உள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே உள்ள தொழிற்பிரிவுகளான மின்சார பணியாளர், பொருத்துனர் ஆகிய தொழிற்பிரிவுகளுடன் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட உள்ள மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல், வெய்க்கில் அட்வான்ஸ் சி.என்.சி. மெசினிங் டெக்னீசியன், இன்டஸ்ட்ரீயல் ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் மேனுபெக்சர் டெக்னீசியன் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இந்த பிரிவுகளில் சேர மாணவர்கள் கட்டாயம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெல்டர் தொழிற் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வயர்மேன், அட்வான்ஸ் சி.என்.சி.மெஷினிங் டெக்னீசியன், ரூபேஸிக் டிசைனர் அன்டு விர்சுவல் வெரிபையர் (மெக்கானிக்கல்) போன்ற 2 ஆண்டு தொழிற் பிரிவுகளுக்கும் வெல்டர், கோபா, மேனுபெக்சரிங் புராசஸ் கண்ட்ரோல் அன்டு ஆட்டோமேஷன் இன்டஸ்டிரியல் ரோபாட்டிக்ஸ் அன்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் போன்ற ஓராண்டு தொழிற் பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த தொழிற் பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி, 12-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

இதேபோல் மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள எலக்ட்ரீசியன், சர்வேயர், மெக்கானிக் மோட்டார் வெய்க்கில், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏசி டெக்னீசியன் ஆகிய தொழிற் பிரிவுகளில் சேர மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. மேற்கண்ட தொழிற் பிரிவுகளில் சேர மாணவர்கள் கட்டாயம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க வரும் போது நிரந்தர தொலைபேசிஎண், 8, 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் சாதி சான்றிதழ், அசல் மாற்று சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மின்னஞ்சல் முகவரியுடன் நேரில் வரவேண்டும்.

புதுமைப்பெண் திட்டம்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50-ஐ இணைய தளம் மூலம் செலுத்தும் வகையில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு கொண்டு வரவேண்டும்.

மேலும் பயிற்சியின்போது அரசால் வழங்கப்படும் உதவி தொகை மொதம் ரூ.750-ம், இலவச பாடபுத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், வரைபட கருவிகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படும்.

இதுதவிர புதுமை பெண் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்ததும் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று தரப்படும். எனவே மாணவர்கள் வருகிற 7-ந்தேதி வரை www.skill.training.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்