மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துறைகளில் 2023-2024-ம் கல்வியாண்டில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் சேர ஒரு சில காலியிடங்கள் உள்ளது. இந்த காலியிடங்களுக்கு அந்தந்த துறை வாயிலாக நேரடி சேர்க்கை மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
முதுகலை படிப்புகளில் தமிழ், வரலாறு, தொல்லியல், சமூகவியல், இதழியல் செய்தி தொடர்பியல், பொருளாதாரம், பொறியியலில் கணினி அறிவியல், உயிர் தொழில்நுட்பவியல், கரிம வேதியியல், தகவல் தொழில்நுட்பவியல், இணைய பாதுகாப்பு, தரவு பகுப்பாய்வு, கல்வியியல், சுற்றுச்சூழல் அறிவியல், நானோ அறிவியல், பயன்பாட்டு புவி இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், நுண்ணுயிரியல், கடல்வாழ் உயிரின உயிர்தொழில்நுட்பவியல், தாவரவியல், உளவியல், புள்ளியியல் ஆகியவற்றுக்கும்,
முதுகலை பட்டய படிப்புகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேலாண்மையும் தணிக்கையும் படிப்புக்கும், நூலக படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
31-ந் தேதி
நாகர்கோவில் முதுகலை விரிவாக்க மையத்தில் முதுகலை தமிழ் பாடத்துக்கும், ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை பாடப்பிரிவுகளான இயற்பியல், கணிதம் மற்றும் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் சுற்றுசூழல் அறிவியல், ராஜாக்கமங்கலம் கடல் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், கடல்சார் அறிவியல் படிப்புகளுக்கும்
இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகளான தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் ஆகியவற்றுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தை தொலைபேசியிலோ அல்லது www.msuniv.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் தெரிவித்துள்ளார்.