எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை

ஜனவரி 2-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி தீர்ப்பாயத்தின் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2023-12-27 19:37 GMT

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வாயுக்கசிவு வெளியானதால் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதனையடுத்து அந்த ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. வாயுக்கசிவு தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்கை ஜனவரி 2-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி தீர்ப்பாயத்தின் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதையடுத்து, தொழிற்சாலை மற்றும் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாயுக் கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல் துறை தகவல் அளித்தது. இருப்பினும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிலர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், எண்ணூரில் உள்ள உர ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மேலும், ஆலையை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளதாகவும், அந்தக் குழு ஆய்வறிக்கை அளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் ஆய்வு முடிவுகள் அடிப்படையில் ஆலையை தற்காலிகமாக மூடி அதற்கான காரணங்கள் குறித்த 'நோட்டீஸ்' ஆலையின் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நுழைவு வாயிலில் போராட்டம் நடத்திய மீனவ கிராமங்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்