பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி தொடக்கம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 28-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-04 04:34 GMT

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

ஏற்கனவே 3 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 533 இடங்களில், பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றில் இதுவரை 58 ஆயிரத்து 307 இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன

இந்த நிலையில் என்ஜினீயரிங் கலந்தாய்வின் முதல் கட்டத்தில் 4-வது சுற்று கலந்தாய்வுக்கு 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்று விருப்ப இடங்களை தேர்வு செய்ய மாணவர்களுக்கு கடந்த மாதம் 29, 30 மற்றும் 31-ந்தேதிகளில் அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி, விருப்ப இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 36 ஆயிரத்து 57 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதனை உறுதி செய்வதற்கு வருகிற 10-ந்தேதி வரை மாணவ-மாணவிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், வகுப்புகளை தொடங்குவதற்கு ஏதுவாக அறிமுக வகுப்புகளை வரும் 14 ஆம் தேதியே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்