லாரி மீது கார் மோதியதில் என்ஜினீயர் பலி
ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராவணையா (வயது 33). இவர் ஓசூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்பா, இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து குடும்பத்துடன் காரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார்.
ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு ராவணையாவை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராவணையா பரிதாபமாக உயிரிழந்தார்.
காயம் அடைந்த ராவணையாவின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.