டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி

பெரம்பலூரில் டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலியானார். இதையடுத்து, தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2022-11-02 18:30 GMT

டிப்பர் லாரி மோதல்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52), என்ஜினீயர். இவர் பெரம்பலூரில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், திருசன் என்ற மகனும், கீர்த்திஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் ஏரிக்கரை எதிரே உள்ள நெடுவாசல் பிரிவு சாலையில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியே சென்ற டிப்பர் லாரி செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பீதியடைந்த டிரைவர் டிப்பர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

பிரேத பரிசோதனை

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், விபத்தை ஏற்படுத்தியவர் திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரத்தை சேர்ந்த மாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்