என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

கோவை நட்சத்திர ஓட்டலில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2022-09-27 18:45 GMT

கோவை நட்சத்திர ஓட்டலில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

என்ஜினீயர்

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 67). வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருடைய மகன் சீனிவாசன் (36). திருமணம் ஆகவில்லை. இவர், கனடாவில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார்.

ஆனாலும் அவர் மிகுந்த மன அழுத்தம் காரணமாக அவதிப் பட்டு வந்தார். அதில் இருந்து மீள்வதற்காக சீனிவாசன் கடந்த 22-ந் தேதி கோவைக்கு வந்து லட்சுமி மில் சிக்னலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 25-ந் தேதி தற்கொலை செய்வதற்காக ஓட்டல் அறையில் வைத்து விஷம் குடித்தார். சிறிது நேரம் கழித்து கழிவறைக்கு சென்ற சீனிவாசன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் மறுநாள் மற்றொரு சாவி மூலம் அறையை திறந்து பார்த்தனர். அங்கு சீனிவாசன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

ஓட்டல் அறையில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சீனிவாசன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் எனக்கு கடுமையான மன உளைச்சல் உள்ளது.

நான் தனிமையில் தவிக்கிறேன். என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்