ஸ்ரீமுஷ்ணத்தில் பிளஸ்-2 மாணவரை கொலை செய்த என்ஜினீயர் கைது மொட்டை அடித்துக்கொண்டு ஊர் சுற்றியபோது சிக்கினார்
ஸ்ரீமுஷ்ணத்தில் பிளஸ்-2 மாணவரை கொலை செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மொட்டை அடித்துக்கொண்டு ஊர் சுற்றியபோது போலீசாரிடம் சிக்கினாா்.;
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் ஜீவா(வயது 17). விருத்தாசலத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவருக்கும், இவரது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் என்ஜினீயர் ஆனந்த்(22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை பள்ளிக்கூடம் செல்வதற்காக ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த பெலாந்துறை வாய்க்கால் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஜீவாவை அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தை தேடி வந்தனர்.
3 தனிப்படைகள்
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஜெயங்கொண்டம்-அரியலூர் மார்க்கத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் ஸ்ரீமுஷ்ணம் நமசுவாரி(ஓடை) அருகில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த நபரை சந்தேகத்தின் பேரில் மறித்தனர்.
தப்பி ஓட்டம்
உடனே அவர் மோட்டார் சைக்கிளை ஓடை மேம்பாலத்தில் நிறுத்திவிட்டு, 20 அடி ஆழம் உள்ள ஓடைக்குள் குதித்து தப்பி ஓடினார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் விடாமல் அவரை பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். ஹெல்மட்டை கழற்றி பார்த்தபோது அந்த நபர் தலையை மொட்டை அடித்து, மீசையை மழித்து இருந்தார்.
விசாரணையில் அவர் பிளஸ்-2 மாணவர் ஜீவாவை கொலை செய்த ஆனந்த் என்பதும், ஆள் அடையாளம் தொியாமல் இருப்பதற்காக மொட்டை அடித்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
காலில் காயம்
மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடுவதற்காக ஓடையில் குதித்த ஆனந்துக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் சிகிச்சைக்குப் பின் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.