விமானத்தில் கழுகு மோதியதால் என்ஜின் சேதம்

கோவையில் இருந்து புறப்பட்ட ஷார்ஜா விமானத்தில் கழுகுகள் மோதியதால் என்ஜின் சேதமானது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 164 பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2023-01-02 18:45 GMT


பீளமேடு

கோவையில் இருந்து புறப்பட்ட ஷார்ஜா விமானத்தில் கழுகுகள் மோதியதால் என்ஜின் சேதமானது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 164 பயணிகள் உயிர் தப்பினர்.

ஷார்ஜா விமானம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை உள்ளது.

இங்கிருந்து தினமும் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் செல்கின்றன.

இந்நிலையில் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது.

பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் இடது என்ஜினில் 2 கழுகுகள் பறந்து வந்து மோதின. அந்த வேகத்தில் ஒரு கழுகு என்ஜினுக்குள் சிக்கியது.

பயணிகள் தப்பினர்

உடனே சுதாரித்துக் கொண்ட விமானி சாதுரியமாக செயல்பட்டு அவசர அவசரமாக விமானத்தை கோவை விமான நிலை யத்திலேயே தரையிறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் 164 பேரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வெளியூர் பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். கோவையை சேர்ந்த பயணிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்த போது கழுகு மோதியதால் என்ஜின் சேதம் அடைந்ததும், அந்த கழுகு இறந்த நிலையில் என்ஜினுக்குள் இருப்பதும் தெரிய வந்தது.

சரி செய்யும் பணி

உடனே தொழில்நுட்ப என்ஜினீயர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சேதம் அடைந்த என்ஜினை சரி செய்ய கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டன.

பழுதான என்ஜின் சரி செய்யப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் ஷார்ஜா புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை பயணிகள் ஓட்டல்களில் தங்கி இருப்பார்கள் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது கோவை விமான நிலையத்தில் தான் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.

பறவைகளால் பாதிப்பு

கோவை விமானநிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் போதும், புறப்படும் போதும் பறவைகள் மோதாமல் இருக்க 8 ஊழியர்கள் பறவை, முயல், மயில் உள்ளிட்ட வனஉயிரினங்களை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதையும் மீறி கோவை விமான நிலையத்தில் பறவைகள் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

எனவே சிறிய பட்டாசுகளை வெடிக்க செய்வது உள்ளிட்ட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விமானத்தில் பறவைகள் மோதும் சம்பவங்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்