மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
திருச்சி, திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சி, திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மணல் குவாரி
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ராமச்சந்திரனின் முத்துப்பட்டினம் வீடு, புதுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவானைக்காவல்
இதன் தொடர்ச்சியாக திருச்சியில் திருவானைக்காவல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள மணல் குவாரிக்கு 2 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் வந்தனர். மணல் குவாரியின் முகப்பு பகுதியில் 2 அதிகாரிகளும், மணல் குவாரியின் உட்பகுதியில் 2 அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அப்போது, துணைராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பின் போது, இவரது அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கட்டு கட்டாக எடுத்து சென்றனர். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியும், ராமச்சந்திரனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். மணல் குவாரி விஷயத்தில் ராமச்சந்திரன் முறையான கணக்கு காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. இதன் காரணமாக இந்த திடீர் சோதனை நடந்ததாக தெரிகிறது.