4 இடங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை

கோவையில் லாட்டரி அதிபரி மார்ட்டினுக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று 2-வது நாளாக சோதனை செய்தனர்.

Update: 2023-10-13 19:30 GMT

கோவை

கோவையில் லாட்டரி அதிபரி மார்ட்டினுக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று 2-வது நாளாக சோதனை செய்தனர்.

லாட்டரி அதிபர்

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இதற்கிடையே கடந்த மே மாதத்தில் மார்ட்டின் மற்றும் அவருடைய மருமகன், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.

2-வது நாளாக சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு மற்றும் அவரின் ஹோமியோபதி கல்லூரி, அங்கு உள்ள அலுவலகம் மற்றும் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள அலுவலகம் ஆகிய 4 இடங்களில் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அலுவலகங்கள் உள்பட 4 இடங்களும் பூட்டப்பட்டு சோதனை நடந்தது. அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்கள் உள்பட அனைத்து பொருட்களிலும் சோதனை நடத்தினார்கள்.

ஆவணங்கள்

இந்த சோதனையில் சில ஆவணங்கள் அமலாக்கத்துறையினருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தது என்பது உறுதியாக தெரியவில்லை. அது தொடர்பான அறிவிப்பையைும் அமலாக்கத்துறை வெளியிடவில்லை. தொடர்ந்து இரவு வரை சோதனை நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்