பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது

பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-12 20:37 GMT

சிவகாசி, 

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணியின் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இதில் 82 கட்டிடங்கள் இருந்தது தெரியவந்தது. இதில் 9 கடைகளை மட்டும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வந்த 43 பேருக்கு மட்டும் எம்.புதுப்பட்டி அருகில் நிலம் வழங்கி சிவகாசி தாசில்தார் நடவடிக்கை எடுத்தார். இதில் 9 பேர் அதற்கான ஆணைகளை பெற்று சென்றனர். மற்றவர்கள் ஆணைகளை பெற விரும்பவில்லை. இந்தநிலையில் 14-ந் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்களுக்கு இங்கேயே பட்டா வழங்க வேண்டும் என்று கோரி கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வரும் 50-க்கும் மேற்பட்டவர்கள் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பரணி மாரி, ரமேஷ், மணிமாறன் உள்ளிட்ட சிலருடன் சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரனை சந்தித்து பேசினர். தற்போது வசித்து வரும் பகுதியிலேயே தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

மாற்று இடத்துக்கு சென்றால் தொழில், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அங்கேயே வசிக்க உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பொத்துமரத்து ஊருணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக இன்று அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் துண்டிக்கப்படலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்