குமரன் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குமரன் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2023-06-13 14:19 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் குமரன் ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குமரன் ரோட்டில் அகற்றம்

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பிரதான சாலைகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து அகற்றி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் பிரதான சாலையான குமரன் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது.

பொக்லீன் எந்திரங்கள் மூலமாக கடைகளுக்கு முன்பு சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து மூடப்பட்ட சிமெண்ட் சிலாப்புகளை அடைத்து அகற்றினார்கள். அதுபோல் கடைகளுக்கு முன்புறம் அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல், கடைகளுக்கு முன்பு ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கான்கிரீட் மற்றும் சிமெண்ட் செங்கற்களால் ஆன கட்டுமானங்கள் ஆகியவற்றை உடைத்தெறிந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

கடைகளுக்கு முன்புறம் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றினார்கள். தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகளுக்கான மேஜை உள்ளிட்டவற்றையும் லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி அருகே முனிசிபல் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று மாலை நடைபெற்றது. கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றினார்கள்.

குமரன் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த ஆம்புலன்சுகள் கூட திணறியபடியே சென்றது. பகல் நேரத்தில் முக்கிய சாலையான குமரன் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.


4 காலம்

----

குமரன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதையும், அந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையும் படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்