காஞ்சீபுரம் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

காஞ்சீபுரம் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update:2022-09-26 16:15 IST

காஞ்சீபுரம்,

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவில் நகரமாகவும் சுற்றுலா நகரமாகவும் விளங்க கூடிய காஞ்சீபுரம் மாநகரில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க காஞ்சீபுரத்தை சுற்றிலும் முக்கிய சாலைகளில் நடை பாதைகள் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த நடைபாதைகளை குடியிருப்பு வாசிகளும், கடைகள் வைத்திருப்பவர்களும் ஆக்கிரமித்து பொதுமக்கள் நடந்து செல்ல வழி இல்லாமல் உள்ளது.

இதனால் காஞ்சீபுரம் மாநகரில் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை கருத்தில் கொண்டு காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக காமாட்சி அம்மன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் செல்லும் புத்தேரி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

பேனர்கள் அகற்றம்

அந்த வகையில் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இடத்தை மீட்டு வருகின்றனர் அது மட்டுமல்லாமல் நகரை சுற்றிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அகற்றி வருகின்றனர்.

மேலும் காஞ்சீபுரம் மாநகராட்சிகளுக்குட்பட்ட நான்கு ராஜ மாடவீதிகளிலும் உள்ள கேட்பாரற்று கட்டி வைக்கப்பட்டு இருக்கும் தள்ளு வண்டி கடைகள், தேவையற்ற தளவாட பொருட்கள், இடிமான கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

காஞ்சீபுரம் நகரில் மேற்கொள்ளப்படும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்