சாலையை தனி நபர் ஆக்கிரமிப்பு

மேட்டு இடையம்பட்டியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். அப்போது தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-05-19 12:07 GMT

சாலை ஆக்கிரமிப்பு

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அடுக்கம்பாறை ஊராட்சிக்குட்பட்ட மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் ரூ.8.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு மற்றும் ஊர் பொதுமக்கள், மேட்டுடையம்பட்டி கிராமத்தில் செல்லும் பிரதான சாலையில் தனி நபர் ஒருவர், சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக கல் நட்டு அராஜகம் செய்து வருகிறார். இதனால் அந்த வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசு பஸ் இந்த கிராமத்திற்கு சரிவர வருவதில்லை. போக்குவரத்து வசதி இல்லாமல் தொழிலாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு பாகாயத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

இது குறித்து அதிகாரிகள் அந்த நபரிடம் கேட்டால் மிரட்டும் வகையில் பேசுகிறார் என்று புகார் தெரிவித்தனர். உடனே கலெக்டர், வருவாய்த் துறை அதிகாரிகளை அழைத்து தனிநபர் ஆக்கிரமித்து நடப்பட்டுள்ள கற்களை அகற்றவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதேபோல் மூஞ்சூர்பட்டு ஊராட்சிக்குட்பட்ட நாயக்கனேரி கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி, ரூ.6½ லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி, துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.23½ லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேலூர் தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருநாவுக்கரசு, குமார், ரவிச்சந்திரன், கவுன்சிலர் வேலாயுதம், துணைத் தலைவர் தென்போஸ்கோ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சுந்தர்ராஜன், ஊராட்சி செயலாளர் கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்