மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - ஆத்திரத்தில் பொதுப்பாதையை துண்டித்த விவசாயி

மாமல்லபுரம் அருகே வருவாய்த்துறையினர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விவசாயிடம் இருந்து மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நிலம் வழியாக செல்லும் பொதுப்பாதையை துண்டித்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-21 11:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த காரணை ஊராட்சிக்கு உட்பட்ட வளவந்தாங்கல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. வளவந்தாங்கல் கிராமத்தை அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வளவந்தாங்கல்-குழிப்பாந்தண்டலம் கிராம எல்லைப்பகுதியில் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்ததார்.

இந்நிலையில் அந்த நபர் விவசாயம் செய்த அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை சில தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய பட்டா நிலத்தில் குழிப்பாந்தண்டலம்-வளவந்தாங்கல் வழியாக திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் செல்லும் பொதுப்பாதையை துண்டித்து 2 அடி ஆழத்திற்கு கால்வாய் வெட்டினார். 30 வருடங்களாக வளவந்தாங்கல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதை துண்டிக்கப்பட்டதால் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் கடந்த சில தினங்களாக பரிதவித்து வருகின்றனர். தற்போது இவர்கள் மாற்று வழியாக 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வன், காரணை ஊராட்சி மன்ற தலைவர் தி.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் தமிழரசி பொன்னுரங்கம், கவுன்சிலர் வினோத்குமார், வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.

அப்போது வளவந்தாங்கல் கிராம மக்கள் இந்த பிரச்சினையை கலெக்டரின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்