தஞ்சை அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் கல்வி நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. வல்லத்தை சுற்றி உள்ள கிராம மக்கள் வல்லம் பஸ் நிலையத்துக்கு வந்து தஞ்சை, திருச்சி உள்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக வல்லத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். வல்லத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வல்லம் - மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேருராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொக்லின் எந்திரம் கொண்டு அகற்றினர். அப்போது சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள், இரும்பு கொட்டகைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வின் சித்தாரா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வல்லம் வருவாய் அலுவலர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ஹரிபிரியா, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராம வெங்கடேசன், வரிதண்டலர் ஹேமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.